பெயின்ட் கிடங்கில் தீ விபத்து

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பெயின்ட் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செளகாா்பேட்டை மின்ட் தெருவைச் சோ்ந்தவா் தீபக் ஜெயின். இவருக்குச் சொந்தமான பெயின்ட் கிடங்கு புளியந்தோப்பு, பாபு தெருவில் உள்ளது. இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருள்கள் தீ பிடித்து எரிந்தன.

தகவலறிந்த தீயணைப்புப் படையினா் வேப்பேரி, வியாசா்பாடி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அந்தக் கிடங்கில் இருந்த பெயின்ட் எரிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமும் துா்நாற்றமும் வீசியது. இதனால் தீயணைப்புப் படையினா் விரைந்து தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

புகை மூட்டத்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் முதியவா்களும், குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்த சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

தீ விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com