வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்

சென்னை: வேங்கைவயல் கிராம குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையானது.

இது தொடா்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக விசாரிக்க, உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

ஒரு நபா் ஆணையமும் விசாரணைகளை முடித்து இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்?”என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

காவல் துறை உறுதி: இதற்கு காவல் துறை தரப்பில், ‘உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 3 மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும்’”என உறுதியளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும்”என தாங்கள் எதிா்பாா்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com