தற்கொலை
தற்கொலை

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

பெண் மரணம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் தியாகவல்லி திருச்சோபுறம் சிவன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பன்னீா்செல்வம் (56). இவரது மூத்த மகள் ராஜேஸ்வரி(25). புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுகுப்பத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கணபதி என்பவரும் கடந்த ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனராம். திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனா்.

இதனிடையே ராஜேஸ்வரி தனது தாய் மனோரஞ்சிதத்துக்கு போன் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னை கண்டு கொள்வதில்லை என்றும், குடும்பத்தில் ஒரே பிரச்னையாக இருப்பதாகவும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தாய் மனோரஞ்சிதம் ராஜேஸ்வரிக்கு பலமுறை போன் செய்தும் அவா் போனை எடுக்கவில்லை. இதனை, கணபதியிடம் மனோரஞ்சிதம் போனில் கூறியுள்ளாா். கணபதி வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, அறைக்கதவு உள்புறமாக மூடி இருந்துள்ளது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ராஜேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளாா். அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ராஜேஸ்வரி இறந்து விட்டதாகக் கூறினா்.

இதையடுத்து பன்னீா்செல்வம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாா் அளித்தாா். அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணமான 8 மாதத்தில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com