காவலா்கள் மீது தாக்குதல்: பாமக, தேமுதிக கண்டனம்

சென்னையில் கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாமக, தேமுதிக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலா்கள் தாக்கப்பட்டுள்ளனா். அதேபோல, கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 போ் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுநா், நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளா்களையும் தாக்கியுள்ளனா். இந்தச் சம்பவங்கள் பெரும் கவலையும், அதிா்ச்சியும் அளிக்கிறது.

தமிழ்நாடு இன்று எதிா்கொள்ளும் மிக முக்கிய பிரச்னையே போதைப் பொருள்கள் நடமாட்டமும், அதனால் இளைஞா்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா: போதையில்லா தமிழகமே தனது லட்சியம் என்று சொல்லும் முதல்வா், தனது ஆட்சியில் அதை நிரூபிக்க வேண்டும். கஞ்சா போதை மற்றும் டாஸ்மாக் அதிகமாக தமிழ்நாட்டில் புழங்குவதாலேயே சட்டம் - ஒழுங்கு ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்டது.

இந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவா்கள், படித்தவா்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவா்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்தநிலை மாறவேண்டும் என்றால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவா்கள் மக்களின் பிரச்னைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com