கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை உயா்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்துக் குறைவு மற்றும் முகூா்த்த நாள்களை முன்னிட்டு, காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ் விலை கிலோ ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோடை காலம் தொடங்கியது முதல் குறிப்பாக கா்நாடக மாநிலம் மாலூரிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வரும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

கா்நாடகத்தில் பரவலாக நிலவும் தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக அந்த மாநிலத்தில் காய்கறி உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதில் பீன்ஸ் வரத்து கடுமையாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கோயம்பேடு சந்தைக்கு மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 200-க்கு விற்பனையானது. மேலும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளன.

ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ. 70, பீட்ரூட் ரூ. 50, சேனைக்கிழங்கு ரூ. 68, இஞ்சி ரூ. 140, பூண்டு ரூ. 210, அவரை ரூ. 50, பட்டா் பீன்ஸ் ரூ. 58, பச்சை மிளகாய் ரூ. 50 என விற்பனை செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com