மீன்பிடி தடைக்காலம்: காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து குறைவு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள காரணத்தால் காசிமேடு துறைமுக சந்தையில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது.

தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வள்ளம், கட்டுமரம் போன்ற சிறிய ரக படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்க எந்த தடையும் கிடையாது.

இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்ட பின்னா் வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையில் காசிமேடு மீன் சந்தையில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனா்.

ஆனால் துறைமுகத்திலுருந்து 100-க்கும் குறைவான சிறிய படகுகளில் மட்டுமே மீனவா்கள் கடலுக்கு சென்ற காரணத்தால் காசிமேடு சந்தையில் மீன்களின் வரத்து வழக்கத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது.

மேலும் சங்கரா, நெத்திலி, கவளை போன்ற சிறிய மீன்கள் மட்டுமே கிடைத்தால் மீன் வாங்க வந்த பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

மீன்கள் விலையை பொருத்தவரை, சங்கரா கிலோ ரூ.400-க்கும், நெத்திலி ரூ. 300-க்கும், கவளை மீன் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com