மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களின் வரத்து வெகுவாகக் குறைந்து, விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

News image

காசிமேடு

file photo

Updated On :31 மார்ச் 2026, 7:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களின் வரத்து வெகுவாகக் குறைந்து, விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிருக்கிறது. ஆனால், அதற்கு முழுதாக இரண்டு வாரங்கள் இருக்கும்நிலையில், ஒரு வார காலத்துக்கும் மேலாகவே காசிமேடு துறைமுகத்துக்கு மீன்கள் வரத்துக் குறைந்துவிட்டன.

எப்போதும் மீனவர்கள் மற்றும் வாங்கும் மக்களால் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும் காசிமேடு துறைமுகம் தற்போது வார நாள்களில் தனது பழைய கலகலப்பை இழந்து நிற்கிறது.

காரணம், வழக்கமாக, இந்தக் காலத்தில் மீன்கள் கிடைப்பது கொஞ்சம் குறைவதுதான், ஆனால், இந்த ஆண்டு சிலிண்டர் தட்டுப்பாடும் இதனுடன் சேர்ந்துகொண்டுள்ளது என்கிறார்கள் மீனவர்கள்.

தற்போது வணிக சிலிண்டர் ஒன்று ரூ.5000க்கு மேல் விற்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளன. ஆனால் ஒரு சில மட்டுமே ஆழ்கடலுக்குச் செல்கின்றன. காரணம், ஒரு படகு ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்துத் திரும்ப இரண்டு வாரங்கள் வரை ஆகும். அப்படியென்றால், ஒரு படகில் குறைந்தது 3 அல்லது 4 வணிக சிலிண்டர்கள் இருக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால், விலை கொடுத்து வாங்க முடியாமல் பல படகுகள் கடலுக்குச் செல்லவில்லை என்கிறார்கள்.

ஆழ்கடல் மீன்பிடி படகுகள் குறைந்துவிட்டதால், அசைவப் பிரியர்களின் வஞ்சரம், வவ்வால், சங்கரா போன்ற மீன்களின் வரத்துக் குறைந்து, சந்தைகளில் விலை உயர்ந்துள்ளது. பொதுவாக வஞ்ஜரம் மீன்தான் கிலோ ரூ.1000க்கு விற்பனையாகும். ஆனால் கடந்த வாரம் வவ்வால் மீன் ரூ.1000க்கும் கொடுவா போன்றவை ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. இதனால், சந்தைக்கு மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்னும் மீன்பிடி தடைக்காலமே தொடங்கவில்லையே அதற்குள் இவ்வளவு விலையா? என அதிர்ச்சியுடன் குறைந்த அளவில் மீன்களை வாங்கிச் சென்றனர்.

பொதுவாக, மீன்பிடி தடைக்காலங்களில் அதிக விலை கொடுத்து குறைந்த மீன் வாங்கிச் செல்வோம். ஆனால், மார்ச் மாதத்திலேயே அந்த நிலை வந்தவிட்டது. அடுத்த மாதத்தில் எல்லாம் மீன்கடைப் பக்கமே வர முடியாதோ என்று பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துக்கொண்டனர்.

மீன்பிடி தடைக்காலத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மீன்களும், இந்த முறை வருமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், அடுத்த மாதத்தில் மீன்களின் விலை தங்கம் போல உயரலாம் என்றே கூறப்படுகிறது. ஜூன் மாதம் வரை இந்த நிலை தொடரலாம் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள் மீனவர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக் காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்படுவது வழக்கம்.

Summary

At the Kasimedu fishing port, the supply of fish has decreased significantly and prices have skyrocketed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.