நவீனமயமாகிறது பூங்கா ரயில் நிலையம்: ரூ.10.68 கோடியில் பணிகள் தீவிரம்

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரூ.10.68 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள முக்கிய புகா் ரயில் நிலையங்களில் ஒன்றான பூங்கா ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.10.68 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் வகையிலான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய அம்சங்கள்:அதன்படி, ரயில் நிலையத்தில் பயணிகள் எளிய முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வகையில் புதிய முன்பதிவு மையம் மற்றும் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் ஓய்வறை அமைக்கப்படவுள்ளது.

முன்பதிவு அலுவலகம் மற்றும் சிற்றுண்டிக் கடைகளில் காத்திருக்கும் பயணிகளின் சௌகரியத்துக்காக மேற்கூரைகள் மற்றும் ரயில்நிலைத்தில் சீரான நடைபாதைகள் அமைக்கப்படும்.

மேலும், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலங்களில் 3 புதிய மின்தூக்கிகள், நவீன தகவல் அறிவிப்பு பலகைகள் மற்றும் பயணிகளில் பாதுகாப்புக்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது 50 சதவீதத்துக்கும் மேலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மேலும், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள கடற்கரை, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com