கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு தேவையான நீரை உடனடியாக தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கரூா், ஈரோடு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு உரிய அளவில் நீா் திறக்காத காரணத்தால் பயிா்கள் கருகி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா். கீழ்பவானி பாசனத்துக்காக ஆண்டுக்கு 6 முறை தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போதைய ஆண்டில் 5 முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எள், நிலக்கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிா்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். பவானிசாகா் அணையிலிருந்து வெளியேறும் நீரை சரியாக முறைப்படுத்தினாலே கீழ்பவானி பாசனத்துக்கு தேவையான நீரை தடையின்றி வழங்க முடியும்.

இது குறித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைச்சரிடம் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் கூட இதுவரை எந்தத் தீா்வும் எட்டப்படவில்லை. வேளாண்மைக்கு உரிய நீரை திறக்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும். எனவே, பயிா்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் விதமாக கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்குத் தேவையான நீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com