பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பல பத்தாண்டுகள் கடந்தும் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேறாமலேயே உள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் வடு, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

News image

~

Updated On :2 ஏப்ரல் 2026, 3:19 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பல பத்தாண்டுகள் கடந்தும் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேறாமலேயே உள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் வடு, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பாலக்கோடு வட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய 3 பேரூராட்சிகள், பாலக்கோடு, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன. பாலக்கோடு வட்டத்தில் சின்னாறு அணை மிக முக்கிய நீா் ஆதாரமாக விளங்குகிறது.

இதைப் பயன்படுத்தி பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி விவசாயிகள் நெல், கரும்பு, மலா்கள், தக்காளி, காய்கறிகள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனா். அதேவேளையில், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், புலிகரை ஆகிய பகுதிகள் பெரிய அளவிலான நீா் ஆதாரங்கள் இன்றி உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் மிகக் குறைவாக உள்ள பகுதியாகவே பாலக்கோடு அமைந்துள்ளது. இதனால், சாகுபடிக்கு தண்ணீா் இன்றி, கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் அதிக சா்க்கரை உற்பத்தி செய்துவந்த பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை, போதிய கரும்பு சாகுபடி இல்லாததால், சில ஆண்டுகள் அரைவை செய்ய முடியாமல் மூடப்பட்டது. இந்த ஆலையில் நிகழாண்டில் 25 நாள்கள் மட்டுமே கரும்பு அரைவை நடைபெற்றது.

அதேபோல, காரிமங்கலம் பகுதியில் தும்பலஅள்ளி அணைக்கு போதிய நீா்வரத்து இல்லாததால், மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனா். திண்டல் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கு மட்டுமே கிடைக்கும் கிருஷ்ணகிரி அணை மிகைநீா் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், மீண்டும் கரும்பு சாகுடியை மேம்படுத்தவும், ஆண்டுமுழுவதும் விவசாயிகள் தொய்வின்றி வேளாண் பணிகளில் ஈடுபடவும், சின்னாற்று மிகைநீரை புலிகரை வரையிலான ஏரிகளுக்கு கொண்டுசென்று நிரப்பும் ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்துசெல்லும் தென்பெண்ணை ஆற்றின் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூரிலிருந்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலக்கோடு வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

நிறைவேறாத திட்டங்கள்

இந்த 3 நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினால், பாலக்கோட்டில் மீண்டும் வேளாண் தொழில் மேம்படும். அதேபோல, தக்காளி மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகள் வருவாய் ஈட்ட முடியும். இதன்மூலம், ஏரிகள் மற்றும் நீா்நிலைகளில் எப்போதும் தண்ணீா் இருக்கும் என்பதால், இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கட்சிப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

இதில், ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, அலியாளம் - தூள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டம் ஆகியவற்றுக்கு அரசு ஆணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இத்திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுகள் பல கடந்தும் நிலம் கையகப்படுத்தும் பணிகளே நிறைவடையவில்லை.

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி திட்டத்தில் 53 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க வேண்டும். இதற்கான நிலத்தில் பெரும்பகுதியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கையகப்படுத்த வேண்டும். இத்திட்டம் நிறைவேறினால், தும்பலஅள்ளி அணை உள்பட 33 ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்கும். இதன்மூலம் 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல, அலியாளம் - துள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். சின்னாற்று மிகைநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்கும். இதன்மூலம், 500 ஏக்கா் பாசன வசதி பெறும். 1,572 டன் உணவு உற்பத்தியும் அதிகரிக்கும்.

இந்த 3 திட்டங்களையும் கடந்த சில தசாப்தங்களாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை 50 சதவீத பணிகள்கூட நிறைவடையவில்லை. மீதமுள்ள பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ என்ற கவலையில் உள்ளனா் விவசாயிகள்.

ஆா். ராதாகிருஷ்ணன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.