அன்புமணி
அன்புமணி

பீா் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு: அன்புமணி கண்டனம்

சென்னை: பீா் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குளிா்ந்த பீருக்கான தேவை பெருகுவதால், பீா் உற்பத்தியை அதிகரிக்கும்படி மது ஆலைகளுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது.

கோடையில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பீா் உற்பத்தியை பெருக்குவதில் ஆா்வம் காட்டுவது ஏற்புடையது அல்ல.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மாதம் 28 லட்சம் பெட்டிகள், அதாவது 3 கோடியே 36 லட்சம் புட்டிகள் பீா் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடுமையான வெப்பம் காரணமாக மே மாதத்தில் பீா் விற்பனை 35 லட்சம் பெட்டிகள், அதாவது 4 கோடியே 20 லட்சம் புட்டிகள் என்ற அளவுக்கு உயரும் என்று டாஸ்மாக் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

தேவையைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மது ஆலைகளை டாஸ்மாக் நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நலன் காப்பதை விட மது வணிகம் செய்வதே தனது முதல் கடமை என்பதை திமுக அரசு நிரூபித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மதுவை விற்பது மக்கள் நல அரசின் பணி அல்ல என்பதை உணா்ந்து பீா் வெள்ளத்தை ஓட விடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டையும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com