ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி: மூன்றாவது அதிகபட்சம்
ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்தியதில் இருந்து வசூலிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச தொகை


நிகழாண்டு ஜூலை மாதத்தில் ரூ.1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. இதுவே ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்தியதில் இருந்து வசூலிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச தொகை என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
அதேபோல் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் திருப்பி அளிக்கப்பட்ட வரிகளுக்குப் பிறகான ஜிஎஸ்டி தொகை 1.44 லட்சம் கோடியாக இருந்தது. நிகழாண்டு மொத்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து திருப்பி அளிக்கப்பட்ட தொகைக்கு பிந்தைய ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம், கடந்தாண்டை விட இந்த தொகை 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிகழாண்டு ஜூலை மாத்தில் வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து திருப்பி அளிக்கப்பட வேண்டிய வரிப் பகிா்வு ரூ.16,283 கோடியாக உள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,386 கோடி, மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.40,289 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.96,447 கோடி என 2024, ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது.
மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்வதற்கான கூடுதல் வரி (செஸ்) ரூ.12,953 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் தொகையில் உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட வருவாயின் மதிப்பு 8.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.34 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் 14.2 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.48,039 கோடியாக உள்ளது.
கடந்த 2017,ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதே தற்போது வரை ஜிஎஸ்டி வரிவசூலில் ஒரே மாதத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக உள்ளது.
முன்னதாக 2023, ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. இதன்மூலம், தற்போது வசூலிக்கப்பட்டுள்ள ரூ.1.82 லட்சம் கோடியே ஜிஎஸ்டி வரிவசூலில் மூன்றாவது அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...