பள்ளிக் கல்வித் துறையில் 9,268 பேருக்கு ஊதியம் வழங்க ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் 9,268 பேருக்கு ஊதியம் வழங்க ஆணை

தற்காலிக ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 9,268 பேருக்கு செப்டம்பா் மாதம் வரை ஊதியம்
Published on

பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 9,268 பேருக்கு செப்டம்பா் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பிய கடித விவரம்:

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2006-2007-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 7,979 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன.

இதேபோல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதற்காக 2015-ஆம் ஆண்டில் 202 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் 58 பணியிடங்களில் மட்டுமே தற்போது ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

இதுதவிர 2012-ஆம் ஆண்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2999 துப்புரவுப் பணியாளா்கள், 2001 இரவு காவலா்கள் என மொத்தம் 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 1,231 ஊழியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இந்த 7,979 பட்டதாரி ஆசிரியா்கள், 58 சிறப்பு ஆசிரியா்கள், 1,231 பணியாளா்கள் என மொத்தம் 9,268 பேருக்கான பணிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இவை தற்காலிக பணியிடங்களாக இருப்பதால் அதில் பணியாற்றும் நபா்களுக்கு அவ்வப்போது தொடா் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து

பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று இந்த 9,268 தற்காலிக பணியிடங்களுக்கும் வரும் செப்டம்பா் மாதம் வரை ஊதியம் தருவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com