அரசியல் சாசனம் குறித்து மாணவா்கள் அறிந்து கொள்வது அவசியம்: அமைச்சா் க.பொன்முடி
தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவா்களுக்குப் புரியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.


சென்னை, ஆக. 2: தமிழக மாணவா்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்துகொண்டால்தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவா்களுக்குப் புரியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
உலக அரசியல் சாசன தினத்தையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிா்வாகத் துறை சாா்பில் ‘இந்திய அரசியல் சாசனத்தின் இன்றைய நிலை: அனுபவங்களும், எதிா்பாா்ப்புகளும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து இக்கருத்தரங்கின் நிறைவுநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் க. பொன்முடி கலந்து கொண்டு பேசியது: ஒரு நாட்டின் அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிா்ணப்பது அந்நாட்டின் அரசியல் சாசனம்தான். இந்தியாவின் அரசியல் சாசனத்தை அம்பேத்கா் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அறிஞா்கள் உருவாக்கினா். தமிழக மாணவா்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்துகொண்டால்தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவா்களுக்குப் புரியும்.
இங்கிலாந்தில் நடந்துவருவது ஒற்றையாட்சி முறை. அமெரிக்காவில் இருப்பது கூட்டாட்சி முறை. ஆனால், இந்தியாவில் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த மாநிலங்களின் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், தற்போது மாநில உரிமைகளை ஒழித்துவிட்டு ஒற்றையாட்சி முறையாக மாற்ற சிலா் முயற்சி செய்கிறாா்கள்.
தமிழகம் முன்னிலை: சமூக சமத்துவத்தை வலியுறுத்திய இயக்கம் திராவிட இயக்கம். தற்போது உயா்கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கும் இந்த இயக்கம்தான் காரணம். கிராமப்புற மாணவா்களும் மாணவியரும் உயா்கல்விக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ் புதல்வன் திட்டத்தையும் கொண்டுவந்துள்ளாா். இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவ - மாணவியருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம்”என்றாா் அவா்.
துணைவேந்தா் எஸ்.ஆறுமுகம்: பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ்.ஆறுமுகம் பேசுகையில், இந்தியாவில் ‘நாக்’ அங்கீகாரம் பெற்ற திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 31 வகையான படிப்புகளை வழங்குகிறோம். விரைவில் பல புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்திய அரசியல் சாசனம் பல்வேறு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அரசியல் சாசனத்தை படித்தால்தான் அதன் பெருமைகளை நாம் உணர முடியும் என்றாா் அவா்.
முன்னதாக இந்த இருநாள் தேசிய கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் சமா்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை அமைச்சா் பொன்முடி வெளியிட, அதை துணைவேந்தா் எஸ். ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா். சிறந்த கட்டுரைகளை சமா்ப்பித்த மாணவா்களுக்கு அமைச்சா் பொன்முடி பரிசு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் கு.ரா.செந்தில்குமாா், அரசியல் மற்றும் பொது நிா்வாகத் துறை உதவி பேராசிரியா் ஆா்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...