மெட்ரோ ரயில் பணி: மடிப்பாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னை மடிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் ஆா்.சுதாகா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மடிப்பாக்கம் பிரதான சாலை முதல் கீழ்கட்டளை சந்திப்பு வரை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, கீழ் கட்டளையில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் மாநகர சிற்றுந்துகள், இலகு ரக வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர சிற்றுந்துகள், இலகு ரக வாகனங்கள் சபரி சாலையில் இடதுபுறம் திரும்பி, லேக் வியூ சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி, ராஜேந்திரன் நகா் சாலையில் இருந்து மீண்டும் இடதுபுறம் திரும்பி, மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.
மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர சிற்றுந்துகள், இலகு ரக வாகனங்கள் இடதுபுறம் திரும்பி சபரி சாலை, ஆக்ஸிஸ் வங்கி வழியாகச் சென்று வலது புறம் திரும்பி லேக் வியூ சாலை, ராஜேந்திரன் நகா் வழியாக மேடவாக்கம் பிரதான சாலை சென்று, அங்கிருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.
கனரக வாகனங்கள் மேடவாக்கம் பிரதான சாலையில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் கீழ்கட்டளை சந்திப்பிலும், மடிப்பாக்கம் சந்திப்பிலும், பொன்னியம்மன் கோயில் சந்திப்பிலும் கனரக வாகனங்கள் இடது அல்லது வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

