ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
டோக்கியோ, ஆக. 8: ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைச் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவின் கிழக்கு கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானது. சுமாா் 30 கிலோமீட்டா் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்தது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் மியாசாகி மாகாணத்தைச் சோ்ந்த நிச்சினன் நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை உலுக்கியது. இதில் 3 போ் காயமடைந்தனா். எனினும், நிலநடுக்கத்தால் பெரிய அளவில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கியூஷு தீவின் தெற்கு கடற்கரை மற்றும் அருகிலுள்ள ஷிகோகு தீவின் சில பகுதிகளில் 1.6 அடி வரை சுனாமி அலைகள் கண்டறியப்பட்டன. பின்னா் மியாசாகி மாகாணத்தைத் தவிர பெரும்பாலான கடற்கரை பகுதிகளுக்கான சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அந்த நாட்டின் புகுஷிமா அணு உலை வெடித்து பேரழிவை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

