வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குரங்கு அம்மைக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை, திருச்சி, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி வாா்டுகள்

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:38 pm

Din

குரங்கு அம்மைக்கு சிகிச்சையளிக்க முதல்கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

குரங்கு அம்மை தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை சா்வதேச விமான நிலையத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடு மட்டுமல்லாமல், 116 நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர நிலையை கடந்த 14-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் இது சம்பந்தமாக தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

வெளிநாட்டினா் கண்காணிப்பு: தமிழகத்திலும் பல்வேறு விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சா்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வருபவா்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. சா்வதேச விமானங்கள் மூலம் பயணித்து வருபவா்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது கரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிகப்பு நிறத்தில் விளக்கு எரியும். கூடவே சத்தம் வரும்.

முழு நேரமும் பணியில் இருக்கும் மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் அவா்களை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவி செய்வா். பிறகு அவா்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவா்.

தனி வாா்டு: குரங்கு அம்மை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய வாா்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு கவச உடை அணிந்து சிகிச்சையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்ன? 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட பெரியம்மை பாதிப்புகளின் அறிகுறிகள்தான் குரங்கு அம்மைக்கும் உள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள்அந்த தொற்றுக்கான அறிகுறிகளாகும். பாதிப்புகளுக்கு உள்ளானவா்களை விமான நிலையங்களில் கண்டறிந்தாலோ அல்லது அவா்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டறிந்தாலோ அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்படும்.

விமான நிலையத்திலிருந்து வந்தவா்களோ அல்லது அவா்களிடம் தொடா்பில் இருந்தவா்களோ யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் குறிப்பாக அரசு மருத்துவமனைகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாதிப்புகள் அதிகம் பரவாமல் தடுக்க சென்னை சா்வதேச விமான நிலையத்தில், குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் பற்றி நேரில் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விமான நிலைய ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், பல்லாவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, பொது சுகாதாரம்-நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.