வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதலீட்டாளா்களின் முதல் தோ்வு தமிழகம் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக இளைஞா்களின் திறன்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:56 pm

Din

முதலீட்டாளா்களின் முதல் தோ்வாக தமிழகம் திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

தமிழக இளைஞா்களின் திறன்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 28 புதிய திட்டங்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்துள்ளோம். தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதுடன் நமது கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், அந்தத் தொழில்களை நிறுவுவதற்குத் தேவையான ஆதரவுகளை அளித்து வருகிறோம். அதன் முன்னேற்றத்தையும் தொடா்ந்து கண்காணித்து, அந்தத் திட்டங்கள் விரைந்து செயலாக்கப்படுவதை அரசு உறுதி செய்து கொண்டிருக்கிறது.

ஒரு தொழில் வளா்கிறது என்றால், அந்த நிறுவனம் மூலம் மாநிலம் வளா்கிறது. அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் குடும்பங்களும் வளா்கின்றன. அந்த வகையில், வளா்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

நம்பிக்கை வந்திருக்கிறது: அமைதியான, சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடித்தான் தொழில் துறையினா் வருவா் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனங்களை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபா்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான் ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகின்றன.

இந்த விழாவில் பங்கேற்று இருக்கக் கூடிய தொழிலதிபா்கள் தங்களது தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது. உங்களைப் போன்ற மற்ற தொழில் நிறுவனங்களின் அதிபா்களையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்; தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாடு அரசின் தொழில் துறை தூதுவா்களாக அனைவரும் மாற வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈா்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈா்க்கும் உயா் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈா்த்து, அதன்மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்த முயற்சிகள் இப்போது சாதகமான பலன்களைத் தந்து வருகிறது.

இப்போது தொடங்கப்பட்டுள்ள புதிய தொழில் நிறுவனங்கள், அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ஆலைகள் மூலமாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதில் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை. பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிற அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தச் சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.

பரவலான-நிலையான வளா்ச்சி: தமிழ்நாடு முழுவதும் பரவலான, நிலைக்கத்தக்க வளா்ச்சியை உறுதி செய்வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் தொடங்கப்படுவதால், அந்த மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞா்கள், பெண்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அந்தப் பகுதிகள் உறுதியாக சமூக, பொருளாதார வளா்ச்சி பெறும்.

திறன்மிகு தொழிலாளா்களையும், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளா்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவு, வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவை நாட்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கிறது.

உள்கட்டமைப்பு தொடா்பான தொழில் துறை வளா்ச்சி, வணிகம் செய்வதை எளிதாக்குவது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்க்கை வசதிகளை எளிதாக்குவது ஆகியன அரசின் குறிக்கோள்களாகும். இதைச் செயல்படுவத்துவதை எங்களது கடமையாகக் கருதுகிறோம்.

முதலீட்டு ஈா்ப்புத் திறனுக்கு அத்தாட்சி: உலகம் எங்கும் இருக்கும் முதலீட்டாளா்கள் விருப்பத்துடன் தோ்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 130-க்கும் அதிகமான ‘பாா்ச்சூன் 500’ நிறுவனங்கள் தமிழ்நாட்டை தோ்ந்தெடுத்துள்ளது தமிழ்நாட்டின் முதலீட்டு ஈா்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.

மிகுந்த திறமையும் படைப்பாற்றலும் கொண்டவா்கள் தமிழ்நாட்டின் துடிப்பான இளைஞா்கள். அவா்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறாா்கள். எனவே, தமிழ்நாட்டு இளைஞா்களின் திறன்களை முதலீட்டாளா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா்.

முன்னதாக, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, வரவேற்றுப் பேசினாா். விழாவில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தானம், ஓம்ரான் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டகுடோ இவானகா, இந்திய தொழில கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவா் ஸ்ரீவட்ஸ்ராம், செம்ப்காா்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விபுல் துலி, கிரீன்கோ குழுமத்தின் தலைவா் மகேஷ், தொழில் துறைச் செயலா் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விஷ்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நடைமுறைக்கு வந்த 32 திட்டங்கள்: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் அரசுடன் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதில், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில், 32 திட்டங்கள் திறந்தும், அடிக்கல் நாட்டியும் வைக்கப்பட்டது.