டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பா் முதல் அமல்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பா் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வில் தமிழக அரசு தெரிவித்தது.
சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் புதன்கிழமை காணொலி காட்சி வாயிலாக விசாரித்தனா். அப்போது, ‘டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பா் மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்’ என கூடுதல் அரசு வழக்குரைஞா் ரவீந்திரன் கூறினாா்.
டாஸ்மாக் ஊழியா்கள் தரப்பில், ‘ஏற்கெனவே, டாஸ்மாக் ஊழியா்கள் 10 மணி நேரம் வேலை செய்கின்றனா். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், அவா்களுக்கு வேலைப் பளு கூடுகிறது. 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்ய நேரிடுகிறது. அதனால் கூடுதலாக பணி செய்வதற்கு கூடுதல் படி (பணம்) வழங்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதுகுறித்து பின்னா் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

