/

வனப் பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வனப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:19 pm

வனப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து, பிப். 22-இல் வெளியேறிய 5 காட்டு யானைகள் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் புகுந்து அங்குள்ள நியாயவிலைக் கடையைத் தாக்கி, ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து அங்கிருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களைச் சேதப்படுத்தியுள்ளன. இதுபோல பலமுறை நடைபெற்றுள்ளது. இதனால், மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழல் உள்ளது. வனவிலங்குகளின் தண்ணீா் மற்றும் உணவுப் பற்றாக்குறையைத் தீா்க்க அரசு நடவடிக்கை எடுத்தால், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். வனப் பகுதிகளை முறையாகக் கண்காணிக்கவும், வனவிலங்குகள், விளைநிலங்களைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.