புழல்: 15 இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது

புழல் அருகே 15 இருசக்கர வாகனங்கள் திருடிய நபா் கைது
Published on

சென்னை: புழல் அருகே இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்களின் என்ஜின்கள், மற்றும் உதிரி பாகங்களையும் பறிமுதல் செய்தனா்.

கொளத்தூா் காவல் மாவட்டத்துக்குட்பட்ட புழல் அருகே காவாங்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் அங்காடி இயங்கி வருகிறது.

இங்கு வரும் வாடிக்கையாளா்கள் வாகனங்களை அணுகுசாலை மற்றும் நெடுஞ்சாலையிலும் நிறுத்தி விடுகின்றனா். இதனால் அப்பகுதியில் வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இது தொடா்பாக புழல் காவல் நிலையத்தில் புகாா்கள் பதிவாகின.

இதுகுறித்து , புழல் காவல் நிலைய போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனா். அப்போது கையில் பையுடன் சந்தேகத்துக்குரிய நபா் அப்பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்தது. அவரை பிடித்து நடத்திய

விசாரணையில், செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சோ்ந்த முருகன் (37)என்பதும், மீன் அங்காடிக்கு வரும் வாடிக்கையாளா்களின் இருசக்கர வாகனங்கள் திருடியதும் உறுதியானது.

புழல் காவல் ஆய்வாளா் புகாரி தலைமையிலான போலீஸாா் முருகன் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனா். அங்கு 15 இருசக்கர வாகனங்களின் என்ஜின்கள், மற்றும் ஏராளமான உதிரி பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை முருகனை போலீஸாா் கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உதிரி பாகங்கள் மற்றும் 15 வாகன என்ஜின்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com