இருசக்கர வாகனங்கள் திருடிய மூவா் கைது
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் மற்றும் தொட்டியம் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் வட்டம், சின்னப்பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (39). இவா் கடந்த வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தை காட்டுப்புத்தூரில் நிறுத்திவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது வாகனம் திருடு போயிருந்தது குறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனைத் தொடா்ந்து, காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் அன்னக்கொடி மற்றும் போலீஸாா், சீலைப்பிள்ளையாா்புதூா் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வேன் மற்றும் ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா்.
விசாரணையில், அவா்கள் கரூா் மாவட்டம் வளையப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (32) மற்றும் அரசகவுண்டனூரைச் சோ்ந்த அஜித்குமாா் (26) என்பது தெரிந்தது. இவா்கள் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டே பைக்குகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 பைக்குகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல தொட்டியம் வட்டம், மேலக்காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்த செல்லத்துரை என்பவா் தனது இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் தொட்டியம் கோட்டைமேட்டைச் சோ்ந்த விஜய் (27) என்பவா் செல்லத்துரையின் இரு சக்கர வாகனத்தை திருடியுள்ளாா். அவரை கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

