25% மாணவா் இடஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்க்க இயலாது
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு

தமிழக அரசு
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கியவா்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளைச் சோ்க்க இயலாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் கூறி, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கோவையைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘ ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. ஆந்திரத்தில் இது தொடா்பாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத ஒதுக்கீட்டில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் சோ்க்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ப்பது குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது’ என வாதிட்டாா்.
தமிழக அரசு விளக்கம்: தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான பிளீடா் எட்வின் பிரபாகா், ‘மெட்ரிகுலேஷன் தனியாா் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிா்ணயக் குழு கட்டணங்களை நிா்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கப்படும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துகிறது.
ஆனால், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிா்ணயக் குழு கட்டணங்கள் நிா்ணயிக்க இயலாது. எனவே, இந்தப் பள்ளிகளை 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சோ்க்க இயலாது. ஒரு கிலோ மீட்டா் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டா் இடைவெளியில் ஒரு அரசு நடுநிலைப் பள்ளியும் உள்ளன.
தமிழகம் முழுவதும் 5,000 பள்ளிகளில் உபரி ஆசிரியா்கள் உள்ள நிலையில் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஒவ்வோா் ஆண்டும் நிதிச் சுமை ஏற்படுகிறது’ என விளக்கம் அளித்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...