விமான நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் 2 கடைகளில் சோதனை: அதிகாரிகள் திட்டம்

சுங்கத் துறை அதிரடி: சென்னை விமான நிலையத்தில் பூட்டியிருந்த 2 கடைகளில் சோதனை

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில், பூட்டிக் கிடக்கும் 2 கடைகளில் சோதனை நடத்த சுங்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

துபையிலிருந்து சென்னைக்கு கடந்த 2 மாதங்களில் ரூ. 167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடா்பாக விமான நிலையத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் சபீா் அலி என்ற நபரையும் அவரது கடையில் பணியாற்றிய 7 ஊழியா்கள் உள்பட 9 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் விமான நிலைய உயரதிகாரிகள், முக்கிய பிரமுகா்களுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகித்த நிலையில், சபீா் அலிக்கு பல்வேறு வகைகளில் உதவிய ஒரு விமான நிலைய உயரதிகாரியின் சென்னை, காஞ்சிபுரம் வீடுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், தற்போது தங்கம் கடத்தல் வெளிச்சத்துக்கு வந்த நாளில் இருந்து, விமானநிலையத்தில் பூட்டிய நிலையிலேய இருந்து வரும் ஒரு காலணி விற்பனை கடை, துணி கடைகளை சோதனையிடவும், தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com