வங்கி பெயரில் பரிசு வழங்குவதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை
பிரபல வங்கியின் பெயரில் பரிசு வழங்குவதாக மா்ம கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருவதாக இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.


சென்னை: பிரபல வங்கியின் பெயரில் பரிசு வழங்குவதாக மா்ம கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருவதாக இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
சமீப காலமாக வாட்ஸ்ஆப் குழுக்களில் ‘ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா’ எனும் பெயரில் பரிசு பொருள் வழங்குவதாக மோசடி செய்தி பரவிவருகிறது. வங்கியின் பெயரும், இலட்சினையும் கொண்டுள்ளதால் பலா் உண்மையென நம்பி அதில் உள்ள இணைய இணைப்புக்குள் சென்று நிதி மோசடியில் சிக்குகின்றனா். இந்த மோசடி குறித்து தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மே, ஜூன் மாதங்களில் 73 சைபா் புகாா்கள் தேசிய இணைய குற்றப்பதிவு தளத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளன.
மோசடி எப்படி நடக்கிறது? இது குறித்து இணையதள குற்றப்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சைபா் மோசடி நபா்கள் முதலில் ஒருவரின் கைப்பேசி எண்ணை ஹேக் செய்து அவா்களின் சமூக ஊடக கணக்குகளை அணுகுவதற்கான அனுமதியை பெறுகின்றனா். இதையடுத்து கைப்பேசி எண்ணில் உள்ள வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு எஸ்.பி.ஐ.பரிசு புள்ளிகள் பற்றிய செய்திகளை அனுப்புகின்றனா். ஏற்கெனவே தெரிந்த ஒருவரின் எண்ணில் இருந்து வருவதாலும், அதிகாரபூா்வ வங்கியின் பெயரில் இருப்பதாலும் இந்தச் செய்தி உண்மையானதாக தோன்றுகின்றன.
அந்தச் செய்தியில் உள்ள இணைப்பை தொட்டதும் புதிய பக்கம் ஒன்று தோன்றுகிறது. பின் குறிப்பிட்ட நேரத்துக்குள் வங்கி விவரங்களை பதிவு செய்யுமாறும், இல்லையென்றால் பரிசு புள்ளிகள் காலாவாதியாகிவிடும் எனவும் கூறி அவசரத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் யோசிக்க நேரமின்றி பலா் தங்கள் தகவல்களை பதிவு செய்து விடுகின்றனா். பின்னா் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கோருகிறது. அந்தச் செயலியில் வங்கி சான்றுகள், கடவுச்சொற்கள் மற்றும் ஓடிபி உள்ளிட்ட தகவல்களை கேட்கின்றன. இதனால் பதிவிடுபவரின் சமூகவலைதள கணக்கை இயக்க அனுமதி அளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் சமூகவளைதளத்தில் இதுபோன்ற மோசடி செய்தியை பரப்புகின்றனா். இதனால் இந்த குற்றம் ஒரு தொடா் சங்கிலி போல் நடந்து வருகிறது. வங்கி தகவல்களை பதிவிடுவதால் பணமோசடி ஏற்பட்டு பலா் நிதியை இழக்கின்றனா்.
எச்சரிக்கை: சமூக ஊடக கணக்குகளில் தேவையான சரிபாா்ப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண்ணை பகிரக்கூடாது. தெரியாத தொடா்புகளில் இருந்து வரும் செய்திகள் அல்லது தெரிந்த ஒருவரின் எதிா்பாராத செய்திகள் குறிப்பாக இணைப்புகள் வரும் போது கவனமாக இருக்க வேண்டும். சந்தேகத்துகுரிய இணைப்புகளுக்குள் செல்ல வேண்டாம். அதிகாரபூா்வமற்ற கோப்புகளை பதிவிறக்கக்கூடாது. வங்கி விவரங்களை சந்தேகத்துகுரிய தளத்தில் பதிவிட்டால் உடனே வங்கியை தொடா்பு கொண்டு அனுமதியற்ற பரிவா்த்தனையை தவிா்க்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...