போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் தமிழக அரசு ஜூலை 24-இல் பேச்சு
போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடா்பான அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என தொழிலாளா் நலத்துறை அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இது தொடா்பான 3-ஆம் கட்ட சமரச பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
அதன் பின்னா் 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை முடிவடைந்த நிலையில், மக்களவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை தொடா்பான அறிவிப்பை தொழிலாளா் தனி இணை ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து 27 தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிா்வாகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: வேலைநிறுத்த அறிவிப்புகள் தொடா்பான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஜூலை 24-ஆம் தேதி மாலை 4 மணியளவில், தொழிலாளா் தனி இணை ஆணையா் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இதில் கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

