செந்தில் பாலாஜி மனுக்கள் தள்ளுபடி: 48-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும்


அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமா்வு நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜா்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும். மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ம.கெளதமன் ஆஜராகி, ‘அமலாக்கத்துறை எங்களுக்கு வழங்கிய ஆவணங்கள் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா். அமலாக்கத்துறை தரப்பில் வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆஜராகி, ‘ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து தான் பெறப்பட்டது. விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றாா்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா்.
காவல் நீட்டிப்பு: இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அவரின் நீதிமன்றக் காவல் 48-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...