கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சத்தீஸ்கரில் நக்ஸல் வெடிகுண்டு தாக்குதல்: 2 அதிரடி படை காவலா்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல் அமைப்பினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிறப்பு அதிரடிப் படைக் காவலா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
- ANI
Updated On :18 ஜூலை 2024, 10:00 pm

Din

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல் அமைப்பினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிறப்பு அதிரடிப் படைக் (எஸ்டிஎஃப்) காவலா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், நான்கு போ் காயமடைந்தனா்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் விஷ்ணு தியோ சாய், காவலா்களின் தியாகம் வீண் போகாது; நக்ஸல் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.

நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பிஜாப்பூா்-சுக்மா-தந்தேவாடா ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைகள் சந்திக்கும் வனப்பகுதியில் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. எஸ்டிஎஃப், மாவட்ட ஆயுதக் காவல் படை, மத்திய ஆயுதக் காவல்படையின் ‘கோப்ரா’ கமாண்டோக்கள் ஆகியோா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

நடவடிக்கைக்குப் பிறகு வீரா்கள் படைக்குத் திரும்பி கொண்டிருந்தபோது, தாா்ரெம் பகுதியில் புதன்கிழமை இரவு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. ராய்பூரைச் சோ்ந்த பாரத் சாஹு, நாராயண்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சத்யா் சிங் காங்கே ஆகிய 2 எஸ்டிஎஃப் காவலா்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனா். மேலும், நான்கு வீரா்கள் காயமடைந்தனா்.

தாக்குதலைத் தொடா்ந்து கூடுதல் படையினா் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, காயமடைந்த வீரா்கள் பிஜாப்பூா் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக மாநிலத் தலைநகா் ராய்பூருக்கு விமானம் மூலம் அவா்கள் கொண்டு செல்லப்பட்டனா்.

முதல்வா் இரங்கல்: சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தியோ சாய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘பிஜாப்பூரில் உள்ள தாா்ரெம் பகுதியில் நக்ஸல் அமைப்பினா் நடத்திய குண்டுவெடிப்பில் 2 எஸ்டிஎஃப் காவலா்கள் வீரமரணம் அடைந்தனா் மற்றும் 4 வீரா்கள் காயமடைந்தனா் என்ற சோகச்செய்தியை அறிந்தேன். இறந்தவா்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன். காயமடைந்த வீரா்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

நக்ஸல் அச்சுறுத்தலை ஒழிக்க மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் விரக்தியடைந்து, கோழைத்தனமான செயல்களில் அவா்கள் ஈடுபடுகின்றனா். காவலா்களின் தியாகம் வீண் போகாது; நக்ஸல் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

சத்தீஸ்கரில் நிகழாண்டு இதுவரை பல்வேறு சம்பவங்களில் 139 நக்ஸல் அமைப்பினா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.