சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரா்கள் காயம்
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா்.
பிஜாபூா் மாவட்டம், கெரிகுட்டா மலைப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் படை, கோப்ரா படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த 6 கண்ணிவெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் சிக்கி 11 வீரா்கள் காயமடைந்தனா்.
அவா்களில் 10 போ் மாவட்ட ரிசா்வ் படை வீரா்கள் ஆவா். ஒருவா், கோப்ரா படைப் பிரிவை சோ்ந்தவா். அனைவரும் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாத காலகட்டத்தில் கெரிகுட்டா மலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 31 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஏராளமான கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

