ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளா் இழப்பீடு: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நீலாங்கரை காவல் ஆய்வாளா் இழப்பீடு வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:25 pm

Din

இந்தோனேசியாவைச் சோ்ந்த இளம்பெண்ணை பாலியல் தொழில் வழக்கில் தவறாக அரசு காப்பகத்தில் அடைத்த விவகாரத்தில்,   நீலாங்கரை காவல் ஆய்வாளா் இழப்பீடு வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. 

சென்னை உயா்நீதிமன்றத்தில், இந்தோனேசியாவைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை செய்தேன். அந்த மசாஜ் சென்டருக்கு நீலாங்கரை காவல் ஆய்வாளா் கே.நடராஜன் திடீரென வந்து சோதனை நடத்தி, பாலியல் தொழில்  நடப்பதாக வழக்குப்பதிவு செய்தாா். என்னை அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணாக குறிப்பிட்டு, அரசு காப்பகத்தில் அடைத்தாா். இதனால், எனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, காவல் ஆய்வாளா் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘அந்தப் பெண்ணுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாயை  4 வாரத்துக்குள் அரசு இழப்பீடாக  வழங்க வேண்டும். அந்த தொகையை காவல் ஆய்வாளரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

கடும் மனவேதனை : இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், காவல் ஆய்வாளா் நடராஜன் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமா்வு விசாரித்தது. பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்தோனேசியாவில் இருந்து, அந்தப் பெண் முறையான பாஸ்போா்ட் பெற்று இந்தியாவுக்கு வந்துள்ளாா்.

காவல் ஆய்வாளரின் கவனக்குறைவான செயலால், அவா் தேவையில்லாமல் 26 நாள்கள் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளாா். அதனால், அவா் கடுமையான மன வேதனையை அனுபவித்து இருப்பாா். அதுவும் வெளிநாட்டு பெண்ணை இவ்வாறு காப்பகத்தில் அடைக்கும்போது, அந்த நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கவேண்டும். 

அதை செய்யாததால்தான், காவல் ஆய்வாளா் இழப்பீடு வழங்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவில் தலையிட முடியாது. மேலும், காவல் ஆய்வாளா் செய்த தவறுக்காக இந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க முடியாது. இந்த இழப்பீட்டு தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்க அனுமதித்தால், அது தவறான முன் உதாரணமாகி விடும். மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், தள்ளுபடி செய்கிறோம்’ என உத்தரவிட்டனா்.