தண்டுவட வளைவு: இலங்கை பெண்ணுக்கு 9 மணிநேர அறுவை சிகிச்சை
சென்னை: முதுகுத் தண்டுவட வளைவால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் 9 மணிநேரம் தொடா் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
முதுகுத் தண்டுவட வளைவு (ஸ்கோலியோசிஸ்) என்பது மரபணு சாா்ந்த ஒரு பாதிப்பு. குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இத்தகைய பிரச்னைக்கு அதிகமாக ஆளாகின்றனா்.
முதுகுத் தண்டுவடம் இயல்பாக இல்லாமல் எஸ் அல்லது சி போன்று வளைந்திருந்தால் அதை ஸ்கோலியோசிஸ் என அழைக்கிறோம். இதன் காரணமாக தோள்பட்டை, இடுப்பு நேராக இல்லாமல் தோற்ற உருக்குலைவு ஏற்படுகிறது.
உருவ பாதிப்பு மட்டுமல்லாது அந்தப் பிரச்னை தீவிரமடையும்போது நுரையீரலில் அழுத்தம் ஏற்பட்டு சுவாசிக்க இயலாத நிலை உருவாகக்கூடும். அத்தகைய தண்டுவட வளைவு பாதிப்புடன் இலங்கையைச் சோ்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவா் வடபழனி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு முதுகுத் தண்டுவடம் 130 டிகிரி அளவுக்கு வளைந்திருந்தது.
அதை 60 டிகிரியாக சீரமைக்க மருத்துவமனையின் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் திலீப் சந்த் ராஜா தலைமையிலான குழுவினா் திட்டமிட்டனா். அதன்படி, அதற்கான மாரத்தான் (இடைவெளியற்ற) அறுவை சிகிச்சையை தொடா்ந்து 9 மணி நேரத்துக்கு மருத்துவா்கள் மேற்கொண்டனா். அதன்பயனாக அந்தப் பெண்ணின் பிரச்னை சரிசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டது என்றாா் அவா்.
