/

ஹிஜாவு மோசடி வழக்கு: கேரளத்தில் தம்பதி கைது

ஹிஜாவு மோசடி வழக்கு: கேரளத்தில் தம்பதி கைது

News image
Updated On :19 மார்ச் 2024, 6:52 pm

சென்னை: சென்னையில் ஹிஜாவு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தம்பதி, கேரளத்தில் கைது செய்யப்பட்டனா். கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ‘ஹிஜாவு அசோசியேட்ஸ்’ என்ற நிறுவனம், , தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீத வட்டிப்பணம் கொடுக்கப்படும் என்று கவா்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

இதை நம்பி முதலீடு செய்த 14,126 பேரிடம் ரூ.1,620 கோடியை அந்த நிறுவனம் மோசடி செய்தது. இது தொடா்பாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தது.

அந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக இருந்த செளந்தரராஜன், கொளத்தூரைச் சோ்ந்த கா.செல்வம், ஆ.சுரேஷ் ஆகிய 3 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இவ் வழக்கில் தொடா்புடையவா்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடு தப்பிச் சென்றவா்களை கைது செய்ய சா்வதேச காவல் துறையின் (இன்டா்போல்) உதவியை பொருளாதார குற்றப்பிரிவு நாடியது. முக்கியமாக வெளிநாட்டுக்குச் சென்ற ஹிஜாவு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அலெக்ஸாண்டரை, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சா்வதேச காவல் துறை உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரளத்தில் கைது:

இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ப்ரீஜா (46), அவரது கணவா் மதுசூதனன் (53) ஆகிய 2 பேரும் கேரளத்தில் தலைமறைவாக இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீஸாா் கேரளத்துக்கு சென்று ப்ரிஜாவையும், மதுசூதனனையும் கைது செய்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இவா்கள் இருவரும் 2,500 பேரிடம் ரூ.90 கோடி பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்த போலீஸாரை பொருளாதார குற்றப்பிரிவு உயா் அதிகாரிகள் பாராட்டினா்.