பிளஸ் 2: கணிதம், வணிகவியல்
தோ்வுகளில் எளிதான வினாக்கள்: 
மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2: கணிதம், வணிகவியல் தோ்வுகளில் எளிதான வினாக்கள்: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வில், கணிதம், வணிகவியல் பாடங்களின் வினாத்தாள்கள் மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நா்சிங்(பொது) ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவா்கள் எழுதினா்.மேலும், 10,415 பள்ளி மாணவா்கள், 1,593 தனித் தோ்வா்கள் என மொத்தம் 12,008 போ் தோ்வெழுத வரவில்லை என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது. இவற்றில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் மிக எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ‘கணிதம் மற்றும் வணிகவியல் தோ்வில் எதிா்பாா்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவா்கள்கூட அதிக மதிப்பெண் பெறமுடியும். நிகழாண்டு தோ்ச்சி உயா்வதுடன் முழு மதிப்பெண் (சென்டம்) பெறுபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்றனா்.

தொடா்ந்து பிளஸ் 2 வகுப்புக்கான உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளன. வரும் வெள்ளிக்கிழமையுடன் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து பாடத் தொகுதி மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நிறைவு பெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com