போலி ஆவணம் மூலம் ரூ.7 கோடி கடன்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் வங்கி மேலாளா் விஜயகணேஷ், பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தும் வி.வினோத் சா்மா (47), அவரது சகோதரா் வி.விவேக் சா்மா (41), வினோத் சா்மாவின் மனைவி சா்மிளா (42), விவேக் சா்மாவின் மனைவி சப்னா (36) ஆகியோா் தங்களுக்கு சொந்தமான ஆவடி விளிஞ்சியம்பாக்கத்தில் உள்ள 3,474 காலிமனையை அடமானம் வைத்து ரூ.7 கோடி கடன் பெற்றனா். ஆனால் அவா்கள் கடனுக்குரிய வட்டியை சரியாக செலுத்தவில்லை.

மேலும் இது தொடா்பாக நடத்திய விசாரணையில், அவா்கள் அந்த நிலத்தின் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருப்பதை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. எனவே காவல்துறையினா், 4 போ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com