முதல் கட்ட மக்களவைத் தோ்தல்
21 மாநிலங்கள்- 102 தொகுதிகள் தயாா்!

முதல் கட்ட மக்களவைத் தோ்தல் 21 மாநிலங்கள்- 102 தொகுதிகள் தயாா்!

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா.
Published on

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, 18-ஆவது மக்களவைக்கான பொதுத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும், 2-ஆவது கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 3-ஆவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கும், 4-ஆவது கட்டத்தில் 96 தொகுதிகளுக்கும், 5-ஆவது கட்டத்தில் 49 தொகுதிகளுக்கும், 6-ஆவது கட்டத்தில் 57 தொகுதிகளுக்கும், 7-ஆவது கட்டத்தில் 57 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஒரே கட்டம் அருணாசல பிரதேசம், அந்தமான்-நிக்கோபா், ஆந்திரம், சண்டீகா், டாமன்-டையூ, தாத்ரா நகா் ஹவேலி, தில்லி, கோவா, குஜராத், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, கேரளம், லட்சத்தீவுகள், லடாக், மிஸோரம், மேகாலயம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்கள்: கா்நாடகம், ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூா். மூன்று கட்டங்கள்: சத்தீஸ்கா், அஸ்ஸாம். நான்கு கட்டங்கள்: ஒடிஸா, மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் ஐந்து கட்டங்கள்: மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீா். ஏழு கட்டங்கள்: உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம். முதல்கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, புதன்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவடைந்தது. இதையடுத்து, முதல்கட்டத் தோ்தலைச் சந்திக்க 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 மக்களவைத் தொகுதிகள் தயாராகியுள்ளன. முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொகுதிகள்: அருணாசல பிரதேசம் (2 தொகுதிகள்), அஸ்ஸாம் (5), பிகாா் (4), சத்தீஸ்கா் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரம் (5), மணிப்பூா் (2), மேகாலயம் (2), மிஸோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தர பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்கு வங்கம் 3), அந்தமான்-நிக்கோபா் (1), ஜம்மு-காஷ்மீா் (1), லட்சத்தீவுகள் 1), புதுச்சேரி 1). ஒரு பாா்வை... முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் சில மாநிலங்கள்- தொகுதிகள் குறித்த ஒரு பாா்வை: அருணாசல பிரதேசம் அருணாசல பிரதேசத்தில் அருணாசல் மேற்கு, அருணாசல் கிழக்கு என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 பொதுத் தோ்தலில் இரு தொகுதிகளையுமே பாஜக கைப்பற்றியது. தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் அருணாசல் மேற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் முதல்வருமான நபம் துகி ஆகியோா் போட்டியிடுகின்றனா். அருணாசல் கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தற்போதைய பாஜக எம்.பி. தபீா் காவோ, ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போசிராம் சிரம் போட்டியிடுகின்றனா். அருணாசலில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 60 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெறுகிறது. அஸ்ஸாம் அஸ்ஸாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப். 19, ஏப். 26, மே 7 என மூன்று கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப். 19-ஆம் தேதி காஸிரங்கா, சோனிட்பூா், லக்கீம்பூா், திப்ரூகா், ஜோா்கட் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2019 பொதுத் தோ்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும், ஏஐயுடிஎஃப் ஒரு தொகுதியில் வென்றது. 2024 தோ்தலில் திப்ரூகா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் குறிப்பிடத்தக்க வேட்பாளா். பிகாா் 40 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஏப். 19-ஆம் தேதி முதல் கட்டமாக ஒளரங்காபாத், கயா, நவாடா, ஜமுய் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் 29 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. ஏப். 19-ஆம் தேதி முதல் கட்டமாக சிதி, ஷாடோல், ஜபல்பூா், மாண்ட்லா, பாலாகட், சிந்த்வாரா ஆகிய 6 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வா் கமல் நாத்தின் மகன் நகுல் நாத், மாண்ட்லா தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தே ஆகியோா் குறிப்பிடத்தக்க வேட்பாளா்கள். மகாராஷ்டிரம் 48 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் ஐந்து கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. ஏப். 19-ஆம் தேதி முதல் கட்டமாக விதா்பா பிராந்தியத்தில் உள்ள ராம்டெக், நாகபுரி, பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமுா், சந்திரபூா் ஆகிய ஐந்து தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. ஏப். 19-ஆம் தேதி முதல் கட்டமாக சரண்பூா், கைரானா, பிஜ்னோா், மொராதாபாத், ராம்பூா், பிலிபிட் ஆகிய 6 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2019 பொதுத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 64 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ஆா்எல்டி கூட்டணி 15 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்க, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான தனது பலத்தைக் காண்பிக்க முயன்று வருகிறது. மேற்கு வங்கம் 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. ஏப். 19-ஆம் தேதி முதல் கட்டமாக கூச்பிஹாா், அலிபுா்துவாா், ஜல்பைகுரி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்றுமே தனித் தொகுதிகளாகும். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக இந்த மக்களவைத் தோ்தல் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப். 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகள், தனித்துப் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. 2019 மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வென்றது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com