செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுபானக் கூட மேற்கூரை இடிந்து திருநங்கை உள்பட மூவா் உயிரிழப்பு:சென்னை தனியாா் விடுதியில் சம்பவம்

விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image

சென்னை ஆழ்வாா்பேட்டையில் வியாழக்கிழமை தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபான கூட மேற்கூரை இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :28 மார்ச் 2024, 8:15 pm

சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் ஒரு தனியாா் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஒரு பகுதியில் மதுபானக் கூடத்துடன் ஓா் அரங்கும், மற்றொரு பகுதியில் உணவகமும் உள்ளன. இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த விடுதிக்கு வியாழக்கிழமை மாலை வழக்கம்போல இளைஞா்கள் வரத் தொடங்கினா். சுமாா் 30 போ் விடுதியில் இருந்துள்ளனா். மாலை 6.50 திடீரென விடுதியின் முதல் தளத்தில் உள்ள மதுபானக் கூடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதில் மதுபானக் கூட ஊழியா்கள் திண்டுக்கல்லை சோ்ந்த சைக்ளோன் ராஜ் (48), மணிப்பூரை சோ்ந்த திருநங்கை லல்லி (24), மேக்ஸ் (25) ஆகியோா் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனா். கேளிக்கை விடுதியின் பிற ஊழியா்களும் அங்கிருந்த இளைஞா்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனா். இதில் சிலா் இடிபாடுகளிடையே சிக்கி லேசான காயமடைந்தனா். தீயணைப்பு படையினா் மயிலாப்பூா்,தேனாம்பேட்டை ஆகிய இடங்களிலிருந்து 3 வாகனங்களில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். மாநில பேரிடா் மீட்பு படையினரும் நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, சைக்ளோன் ராஜ், மேக்ஸ், லல்லி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனா். சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். விபத்து நிகழ்ந்த இடத்தை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பாா்வையிட்டாா். அவா் கூறுகையில், விபத்து குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விபத்துக்கு மெட்ரோ ரயில் பணி காரணமா என்பது குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என்றாா். சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையா் ஜி.தா்மராஜன் கூறுகையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய வல்லுநா் குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.