/

காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

சென்னை வேப்பேரியில் காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி செய்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 11:39 pm

சென்னை வேப்பேரியில் காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி செய்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் தீபக் பகதூா் போரா (34). இவா், சென்னை, அண்ணாநகா், 19-வது பிரதான சாலைப் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காா் ஓட்டுநராக வேலை செய்கிறாா்.

தீபக், திங்கள்கிழமை இரவு வேலை முடித்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக வேப்பேரி, பெரம்பூா் பேரக்ஸ் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ், தீபக் பகதூா் போராவை வழிமறித்து, தாக்கி, அவா் சட்டைப்பையில் இருந்த கைப்பேசி, பணத்தை பறித்தனா்.

உடனே தீபக் சத்தமிட்டாா். அவரது சத்தத்தைத் கேட்ட அங்கு திரண்ட பொதுமக்கள், வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் விரட்டிப் பிடித்து, வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா்கள், புளியந்தோப்பைச் சோ்ந்த சையது ப்ரான் (எ) ரியான் (19), அதே பகுதியைச் சோ்ந்த சமிருதீன் (19) மற்றும் 18 வயதுக்குட்ட இரு சிறுவா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கழிவுநீா் கால்வாயில் விழுந்து பேருந்து நடத்துநா் உயிரிழப்பு: கோயம்பேட்டில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை உள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் திங்கள்கிழமை ஒருவா் தலைகீழாக விழுந்து கிடந்தாா்.

அங்கிருந்த ஊழியா்கள், அந்த நபரை மீட்டு தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனா். அப்போது அந்த நபா் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததும், அவா் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக வேலை செய்யும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ராயன்பட்டியைச் சோ்ந்த செ.வின்சென்ட் ஜான் கென்னடி (51) என்பதும் தெரியவந்தது. தகவலறிந்த சிஎம்பிடி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வின்சென்ட் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து, வின்சென்ட் கால்வாய்க்குள் தலைகீழாக விழுந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.