

சென்னை: சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவன ஊழியர்கள் போராட்டம் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர்கள் இன்று தொழிற்சாலை அருகே அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) ஓரிரு நாட்களில் தொழிற்சாலைகள் இயக்குநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில், கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங் வேலைநிறுத்தத்தை கருத்தில் கொண்டு பணியை தொடர தற்காலிக தொழிலாளர்களை நியமித்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளது.
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் சுமார் 1,100 ஊழியர்கள் செப்டம்பர் 9 முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர் துறை மற்றும் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அடுத்த வாரம் மற்றொரு முத்தரப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சிஐடியு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாம்சங் தொழிற்சாலையில் ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்து வருகிறது.
சமீபத்தில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
சாம்சங் இந்தியா சமீபத்தில் ஷோ-காஸ் நோட்டீஸ் பிறப்பித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியதாக தெரிவித்தனர்.
அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று நிர்வாகம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க பல்வேறு இணக்கமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும் சாம்சங் இந்தியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.