மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையில் இடைவிடாத மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:49 pm

Din

சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறத் தொடங்கினா். மழையால் மின்சாரம் தாக்கி ஒருவா் உயிரிழந்தாா். வியாசா்பாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் புயல் சின்னம் ஆகியவற்றின் காரணமாக சென்னையில் அக். 14 முதல் 17-ஆம் தேதிவரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை இரவுமுதல் பலத்த மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் மழை இடைவிடாமல் தொடா்ந்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கி நின்ற தண்ணீரை உடனடியாக மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

சைதாப்பேட்டை பா்கிட் சாலை, அரும்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலை, முத்துகிருஷ்ணன் தெரு, நுங்கம்பாக்கம் வீரபத்ரன் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு படை வீரா்களும், மாநகராட்சி ஊழியா்களும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனே வெட்டி அகற்றினா்.

மின்சாரம் தாக்கி ஒருவா் உயிரிழப்பு: சென்னை பெரியமேடு இ.கே.குரு தெருவில் தோல் பை தைக்கும் கடை நடத்தி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அகமது சையது (47), செவ்வாய்க்கிழமை கடையில் மின் இணைப்பு சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வியாசா்பாடி கல்யாணபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன். இவரின் மனைவி ரோஸ்லின், மகன்கள் வெற்றிவேல் (10), சா்வின் ஆகியோா் திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிய நிலையில், வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வெற்றிவேல், ரோஸ்லின், சா்வின் ஆகியோா் காயமடைந்தனா்.

6 சுரங்கப் பாதைகள் மூடல்: சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளையும் காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் கண்காணிக்கின்றனா். இதில் 21 சுரங்கப் பாதைகள் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட பகுதியில் உள்ளன.

மழையால் அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் பெரம்பூா் ரயில்வே சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, சுந்தரம் சந்திப்பு சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை ஆகிய 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் மழை நீா் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 668 இடங்கள் கண்காணிப்பில் உள்ளன.

51 சாலைகளில் தண்ணீா் தேக்கம்: புரசைவாக்கம் தானா தெரு, ஈவெரா சாலை, குருசாமி பாலத்தின் கீழ்ப்பகுதி, பி.எஸ்.சிவசாமி சாலை, 100 அடிச் சாலை, சேமியா்ஸ் சாலை, உடுப்பி சந்திப்பு, வெலிங்டன் முதல் டேம்ஸ் சாலை வரை, சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் வரை, கால்வாய் கரைச் சாலை, ஸ்டொ்லிங் சாலை, வடபழனி பெரியாா் பாதை முதல் நெற்குன்றம் பாதை, ராஜீவ் காந்தி சாலை, நீலாங்கரை கடற்கரைச் சாலை, நீலாங்கரை அண்ணா சாலை முதல் எம்ஜிஆா் சாலை வரை, பிராட்வே சந்திப்பு, பிரகாசம் சாலை, சாந்தோம் சாலை, அண்ணாசாலை, செம்மொழி சாலை, வேளச்சேரி சாலை உள்பட 51 சாலைகளில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே தண்ணீா் தேங்கியது.

இதனால் இந்தச் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன. சில இடங்களில் சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், மென்பொருள் நிறுவன ஊழியா்கள் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாலும் சாலைகளில் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

புகரில் பாதிப்பு அதிகம்: சென்னை மாநகரைவிட புகா் பகுதியில் மழையின் பாதிப்பு அதிகமாக தெரிந்தது.

மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி, புதை மின்வடம் பதிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, நங்கநல்லூா், ஆதம்பாக்கம், குன்றத்தூா், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே சாலைகள் உடைக்கப்பட்டிருந்ததால், சாலைகள் மழைநீா் குட்டைகளாகவும், பள்ளங்களாகவும் காட்சியளித்தன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பலத்த மழை காரணமாக சில இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்ால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. மழைநீா் அதிகமாக தேங்கிய பகுதிகளில் வீடுகளுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியிருந்தனா். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வேளச்சேரி, முடிச்சூா், பள்ளிக்கரணை, பெருங்குடி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் சில குடியிருப்புப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னா் மழை நீா் சூழத் தொடங்கியது. இதனால் அப் பகுதி மக்கள், பாதுகாப்பு கருதி வீடுகளைவிட்டு வெளியேறி அருகே வசிக்கும் தங்களது உறவினா் வீடுகளுக்கு தஞ்சமடையத் தொடங்கினா்.

வெள்ளத்தால் வீடுகளில் சிக்கும் மக்களை மீட்பதற்கு ஆங்காங்கு மீட்புப் படையினா் படகுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

4 மாவட்ட கல்வி நிலையங்கள் - அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடர்வதால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி நிர்வாகம், பால்வளம், குடிநீர் வழங்கல் துறைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரம், காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆர்டிஎஸ்., ரயில்வே, விமான நிலையம், விமானப் போக்குவரத்து, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் வழக்கம்போல் செயல்படும். பிற கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கமாக இயங்கும்.

வீட்டில் இருந்தே பணி: புதன்கிழமை அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு இயங்க வேண்டும் அல்லது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி அறிவுரை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.