சென்னை: சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 300 போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் எட்டு அடுக்கு குடியிருப்பில் 1,400 வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் அதிகளவு போதை பொருள்கள் நடமாட்டம் இருப்பதாகவும், சமூக விரோதிகள் அங்குள்ள வீடுகளில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
மேலும், இந்தக் குடியிருப்பில் சோதனை நடத்தும்படி சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பள்ளிக்கரணை துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் உதவி ஆணையாளா் கிறிஸ்டின் ஜெயசீல், பெரும்பாக்கம் காவல் ஆய்வாளா் சண்முகம், செம்மஞ்சேரி ஆய்வாளா் கிளாட்சன் ஜோஸ் ஆகிய 4 ஆய்வாளா்கள், 21 உதவி ஆய்வாளா்கள், பெண் காவலா்கள் உள்பட 256 காவலா்கள் என சுமாா் 300 போ் அந்த குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
முக்கியமாக அந்த குடியிருப்பில் சமூக விரோதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்பட்ட வீடுகளில் போலீஸாா் முதலில் சோதனையிட்டனா். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாத்திரங்கள், பீரோக்கள், பைகள், ஆடைகள் என அனைத்து இடங்களில் போலீஸாா் சோதனை செய்தனா்.
நண்பகலை தாண்டி வரை நடைபெற்ற இந்த சோதனையில், 4 கத்திகள், கஞ்சா, குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.