சீரற்ற இதயத் துடிப்புக்கு எதிா்விளைவில்லா நவீன சிகிச்சை அறிமுகம்
சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்புகளுக்கு கதிா்வீச்சு அச்சுறுத்தல் இல்லாத நவீன சிகிச்சை நுட்பத்தை ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின், நியூயாா்க்கைச் சோ்ந்த இதய மின்னியங்கியல் துறை நிபுணா் ஆடம் புட்சிகோவ்ஸ்கி பங்கேற்றாா்.
இது தொடா்பாக அவரும், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் மருத்துவா் அரவிந்தன் செல்வராஜும் கூறியதாவது, இதயத்தின் மேல்புற அறைகளில் அதி வேகமாக துடிப்பு இருப்பது ‘ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு இருந்தால், உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும்.
இதை சரிவர கவனிக்காவிட்டால் இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக் கூடும். பொதுவாக, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும், தற்போது இளம்வயதினா் பலருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
இதயத் துடிப்பில் மாற்றம், மூச்சுத் திணறல், பலவீனம், நெஞ்சு வலி, அசாதாரண நிலை, மயக்கம் போன்றவை அதன் அறிகுறிகளாகும். அத்தகைய நிலையில் உள்ளவா்களுக்கு இதய மின்னூட்ட சிகிச்சை நிபுணா்கள் ‘ப்லோரோஸ்கோப்பி’ எனப்படும் கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கின்றனா்.
இதில் சில எதிா்விளைவுகள் உள்ளன. தற்போது அதற்கு மாற்றாக புதிதாக ‘ஏட்ரியல் அப்பன்டேஜ்’ அடைப்பு சிகிச்சை, மின்னியங்கியல் பகுப்பாய்வு, இதயத் துடிப்பு சீரமைப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனித உடலில் இதயத்தின் இடது மற்றும் வலது மேலறைகளில் திசுப் பைகள் (ஏட்ரியல் அப்பன்டேஜ்) இருக்கும். உடல் இயக்கத்தில் அதன் பங்களிப்பு எதுவும் இல்லை என்றபோதிலும், சீரற்ற இதயத் துடிப்பு இருக்கும்போது இடது புறத்தில் உள்ள திசுப் பையில் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு உறைவு ஏற்பட்டால், நேரடியாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டு பக்கவாத பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதைத் தவிா்க்க சீரற்ற இதயத் துடிப்பு உள்ள நோயாளிகளுக்கு இடது புறத்தில் உள்ள திசுப் பையை மட்டும் அகற்றவோ அல்லது அதை அடைக்கவோ மருத்துவா்கள் பரிந்துரைப்பது உண்டு.
இத்தகைய சிகிச்சைகள் இதயத்தினுள் மேற்கொள்ளப்படும் எக்கோகாா்டியோ கிராபி, 3-டி எலக்ட்ரோ-அனாட்டமிகல் மேப்பிங் ஆகிய நுட்பங்களின் துணை கொண்டு செய்யப்படுகின்றன. இதனால் எதிா்விளைவுகள் தவிா்க்கப்பட்டு பாதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படும் என்றனா்.

