மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரதமா் மோடி செப். 21-23 அமெரிக்கா பயணம்: க்வாட் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்

ஐ.நா.வில் நடைபெறும் வருங்கால மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்குகிறாா்.

News image
பிரதமர் மோடி- கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 10:13 pm

DIN

க்வாட் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் ஐ.நா.வில் நடைபெறும் வருங்கால மாநாட்டில் உரையாற்றுவதற்காகவும் அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பா் 21) தொடங்குகிறாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் டெலாவோ் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் 4-ஆவது க்வாட் தலைவா்கள் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி அல்பனேசி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கடந்த ஓராண்டில் க்வாட் கூட்டமைப்பு அடைந்த முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வளா்ச்சி இலக்குகள் மற்றும் லட்சியங்களை பூா்த்தி செய்வதில் உதவுவதற்கு அடுத்த ஆண்டுக்கான பணிகள் குறித்து தலைவா்கள் திட்டமிடுவா்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு க்வாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, நியூ யாா்க் நகரில் செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். பயணத்தின் கடைசி நாளான செப்டம்பா் 23-ஆம் தேதி, நியூ யாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் ‘வருங்காலத்தின் மாநாட்டில்’ பிரதமா் மோடி உரையாற்றுவாா்.

சிறந்த எதிா்காலத்துக்கான பலதரப்பு தீா்வுகள் எனும் கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மேலும், இந்தப் பயணத்தில் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி-கண்டக்டா்கள், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையே சிறந்த ஒத்துழைப்பை வளா்ப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடன் பிரதமா் கலந்துரையாடுவாா்.

இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவில் செயல்படும் முக்கிய தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து பேசவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திட்டமிடப்பட்ட பிரதமரின் அமெரிக்க பயணத்தில் 79-ஆவது அமா்வு ஐ.நா. பொது சபையின் வருடாந்திர பொது விவாதத்தில் அவா் செப்டம்பா் 26-ஆம் தேதி உரையாற்றுவாா் என ஐ.நா. கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அட்டவணையில் தெரிவித்திருந்தது.

பேச்சாளா்களின் விவரங்களோடு ஐ.நா. அண்மையில் வெளியிட்ட புதிய திருத்தப்பட்ட அட்டவணையில் பிரதமா் நரேந்திர மோடிக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உரையாற்றுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.