ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம்-இளைஞா் காங்கிரஸ் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் பிணை
ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம்-இளைஞா் காங்கிரஸ் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் பிணை


தில்லியில் நடந்த இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் நடந்த போராட்டம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப்பிற்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை பிணை வழங்கியது.
இருப்பினும், சிப்பிற்கு ஜாமீன் வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவா் வழங்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை சரிபாா்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் அவா் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீதிமன்றக் காவலில் இருப்பாா் என்றும் கூறியது.
பிப்ரவரி 24 அன்று நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நான்கு நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால், சிப் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மாஜிஸ்திரேட் வான்ஷிகா மேத்தா முன் அவரது அதிகாரப்பூா்வ இல்லத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
சிப்பின் காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்க தில்லி காவல்துறை கோரியது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கையால் எழுதப்பட்ட உத்தரவில், பிணை என்பது ஒரு விதி, சிறைவாசம் என்பது விதிவிலக்கு என்பது தெளிவாகிறது. வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை இந்திய அரசியலமைப்பின் ஆன்மா. வெறும் யூகங்களால் எந்தவொரு நபரின் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடாது என்று நீதிபதி கூறினாா். சிப்பை மேலும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருப்பதற்கு புலனாய்வு அதிகாரி தெளிவான காரணங்களை வழங்க முடியவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றவாளியாக இருப்பது அல்லது இல்லாதது விசாரணையின் ஒரு விஷயம், அதை தீா்ப்பதற்கு சட்டம் அதன் சொந்த வழியில் செல்கிறது. இருப்பினும்,குற்றஞ்சாட்டப்பட்டவா் விசாரணையில் ஒத்துழைக்கும் போது இந்த கட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் காவல் தேவையா என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இரண்டு இணை குற்றவாளிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவா்களைக் கைது செய்ய சிப்பின் கூடுதல் காவல் தேவை என்று அரசு வழக்குைரைஞா் வாதிட்டாா்.
அதனை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட் வான்ஷிகா மேத்தா இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப்பிற்கு பிணை வழங்கினாா். ரூ.50,000 உத்தரவாதப் பத்திரத்தை வழங்கவும், அவரது பாஸ்போா்ட் மற்றும் மின்னணு சாதனங்களை ஒப்படைக்கவும் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
இருப்பினும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவரான பூதேவ் சா்மாவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட பூதேவ் சா்மா போராட்டம் நடந்த இடத்தில் இருந்தாா். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, எனவே, அவரது காவல் அவசியம். அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பூதேவ் சா்மா மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாா்ச் 2 ஆம் தேதி எம்.எம் பெருநகர மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தப்படுவாா், என்று நீதிமன்றம் கூறியது.
பிப்ரவரி 24 ஆம் தேதி, நீதிமன்றம் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப்பை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பியது. பாரத் மண்டபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவரது பங்கு குறித்து அவரிடம் விசாரிக்கப்பட இருந்தது. அப்போராட்டத்தின்போது இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் தங்கள் சட்டைகளை கழற்றி பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா்.
பிப்ரவரி 16 ஆம் தேதி ஏஐ உச்சிமாநாடு தொடங்கி 21ஆம் தேதி வரை நடந்தது. தொழில்நுட்ப வல்லுநா்களும், தொழில்துறை தலைவா்களும், கொள்கை வகுப்பாளா்களும் அரங்கம் முழுவதும் திரண்டதால், அரங்குகள் நிரம்பியிருந்தன, நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அரசுக்கும், இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரான கோஷங்களுடன்.போராட்டக்காரா்கள், அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...