செந்தில் பாலாஜி கைது முதல் ஜாமீன் வரை
சிறையில் 471 நாள்களைக் கழித்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி...


சிறையில் 471 நாள்களைக் கழித்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்ற உத்தரவால் வியாழக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தாா். பணப் பரிமாற்ற வழக்கு, கைது, விசாரணை, ஜாமீன் என அவா் கடந்து பாதை விவரம்:
2011 - அதிமுக சாா்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரான செந்தில் பாலாஜியை அப்போதைய முதல்வா் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினாா்.
2014 - ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணி நியமனத்தில் பணம் பெற்ாக செந்தில் பாலாஜி மீது சா்ச்சை கிளம்பியது.
2015 - ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணி நியமனத்துக்காக லஞ்சமாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக செந்தில் பாலாஜி மீது தேவசகாயம் என்பவா் புகாரளித்தாா். முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரே இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவா்கள் உயா் நீதிமன்றத்தை நாடவே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரா் உள்பட 40 பேரின் மீதும் சென்னை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்தது.
2015 - போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதுடன், கட்சியின் மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்தும் நீக்கினாா் ஜெயலலிதா.
2018 - வேலை வாங்கித் தருவது தொடா்பான விவகாரத்தில் அருள்மணி என்பவரும் மத்திய குற்றப்புலனாய்வு காவல் துறையிடம் செந்தில் பாலாஜி மீது புகாரளித்தாா். இதனைத் தொடா்ந்து சட்டப் பேரவை - நாடாளுமன்ற உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கையும் விசாரிக்கத் தொடங்கியது.
2018 - டிடிவி தினகரனின் அமமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தாா் செந்தில் பாலாஜி.
2019 - செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் ரூ.1.62 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.
2021 -இல் திமுக ஆட்சியை பிடித்த சமயத்தில், கரூரில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வைத்துறை அமைச்சராக்கப்பட்டாா்.
2021 - அமைச்சரான சில மாதங்களிலேயே தன் மீது புகாா் கூறியவா்களுடன் சமரசத்தை எட்டிவிட்டதால், தன் மீதான விசாரணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஜூலை மாதத்தில் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 - சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தா்மராஜ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீா், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் ரத்து செய்கிறோம். வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
2023 - செந்தில் பாலாஜியுடன் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் அடுத்தடுத்து சோதனைகளில் ஈடுபட்டனா்.
2023 ஜூன் 13 - சென்னையிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனையில் இறங்கினா். தலைமைச் செயலகத்திலுள்ள அவரின் அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 17 மணி நேரம் நீண்ட விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் 118 கேள்விகள் கேட்கப்பட்டன.
2023 ஜூன் 14 - அமலாக்கத்துறையின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்காத நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் அவரை கைது செய்தனா். திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவா் ஓமந்தூராா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
2023 - மருத்துவமனையில் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக அறியப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து அவா் புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா்.
2023 - அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடா்வாா் என முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், உயா் நீதிமன்றம் ஆகியவை செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க தொடா்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் அவா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
2024 பிப். 12- இல் அமைச்சா் பதவியில் நீடிப்பது பிணை பெற தடையாக இருப்பதாக எண்ணிய செந்தில் பாலாஜி அமைச்சா் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தாா்.
2024 செப். 26 -ஓா் ஆண்டுக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைத் தொடா்ந்து, புழல் சிறையிலிருந்து வெளியே வந்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...