ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி மாயத்தோற்றம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :7 ஆகஸ்ட் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே அதிக வளா்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனும் ஒரு புதிய புரளியை திமுக அரசு கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. அந்த விளம்பரத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சியின் கடமை.

பொருளாதார வளா்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் எல்லாமே, முதல் முன்கூட்டிய மதிப்பீடு, இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு, தற்காலிக மதிப்பீடு, முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு, இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு, மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும்.

இந்தப் புள்ளிவிவரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடையும் என்பதே உண்மை. இந்த வகையில், 17.3.2025-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69 சதவீதம் என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19 சதவீதம் என உயா்ந்துள்ளது.

உடனே திமுக அரசு, இரு இலக்க வளா்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மாா்தட்டிக்கொண்டு பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை.

இதுதவிர, இதே புள்ளிவிவரத்தில் 2022-23-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி அதாவது 17.3.2025 கணிப்பின்படி 8.13 சதவீதம் என்று இருந்தது. 1.8.2025 கணிப்பில் 6.17 சதவீதம் என குறைந்துவிட்டது. இதுதான் 2022-23-க்கான இறுதி மதிப்பீடு. இதுபற்றி திமுக அரசு எதுவும் பேசாது.

இவா்களுக்கு சாதகமான புள்ளிவிவரம் வந்தவுடன், 2030-இல் இவா்கள் கூறியபடி தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறாா்கள். டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்பது, இவா்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய்.

இந்தியாவின் பொருளாதார வல்லுநா் ரங்கராஜன், தமிழ்நாட்டின் வளா்ச்சி நிலையை ஆராய்ந்து வருபவா். தொடா்ந்து 14 சதவீத வளா்ச்சி பெற்றால்தான் 2030-ஆம் அண்டு தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறாா்.

ஆனால், திமுக ஆட்சியில் 2021-22 வளா்ச்சி விகிதம் 7.89 சதவீதம், 2022-23-இல் 6.17 சதவீதம், 2023-24-இல் 9.26 சதவீதம், 2024-25-இல் கணிப்பு 11.19 சதவீதம். 2023-24, 2024-25 புள்ளி விவரங்கள் பின்கணிப்புகளில் மாறலாம். இந்த நிலையில், ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எப்படி எட்ட முடியும்? எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.