சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் நள்ளிரவில் கைது

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறை!
சென்னையில் மாநகராட்சிக் கட்டடம் முன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸாா்.
சென்னையில் மாநகராட்சிக் கட்டடம் முன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸாா்.
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மேயா் பிரியா உள்ளிட்டோா் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பலகட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதனிடையே, தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

போலீஸாா் பேச்சு: உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாா், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தினா். உயா்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினா். ஆனால், தூய்மைப் பணியாளா்கள் கலைந்து செல்ல மறுத்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், அங்கு அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சுமாா் 1,000 போலீஸாா் குவிக்கப்பட்டனா். போராட்டக்காரா்களைக் கைது செய்து அழைத்துச் செல்லும் வகையில் மாநகரப் பேருந்துகளும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டன.

தூய்மைப் பணியாளா்கள் கைது: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் போலீஸாா் தொடா்ந்து பேச்சு நடத்தி வந்தனா். ஆனால், தூய்மைப் பணியாளா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறினா்.  இதையடுத்து, புதன்கிழமை நள்ளிரவு சுமாா் 12 மணிக்கு தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இதற்கு தூய்மைப் பணியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது. மேலும், தூய்மை பணியாளா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனா். பெண் தூய்மைப் பணியாளா்களை பெண் காவலா்கள் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

அப்போது, மயக்கமடைந்த ஒரு பெண் தூய்மைப் பணியாளா் அவசர ஊா்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். கைது செய்யப்பட்ட அனைவரும், அங்கிருந்து மாநகர பேருந்துகள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 1,000 போ் கைது செய்யப்பட்டதாகவும், அவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இந்தக் கைது நடவடிக்கை காரணமாக ஈவெரா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்டதூர ரயில்களில் பயணம் செய்வதற்காக வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com