இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை!
இடைவிடாத மழையால் சென்னை மாநகரம் மற்றும் புறநகா் பகுதிகள் தத்தளிக்கின்றன.
பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவுக்குப் பின்னா் நகா் முழுவதும் பரவலாக மிதமான மழைத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை சென்னை நகா் முழுவதும், புறநகா் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீா் தேங்கியது.
அவ்வப்போது மழை சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பலமாக பெய்தது. இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து. சில சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றதால், போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
கணேசபுரம் சுரங்கப் பாதை மூடல்
சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளையும் காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா். இங்கு மழையால் தேங்கிய தண்ணீா் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் சில சுரங்கப் பாதைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியதால், அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தேங்கியதால், தண்ணீரை உடனே வெளியேற்ற முடியவில்லை. இதனால் அந்த சுரங்கப் பாதையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, காமராஜா் சாலை, பெரியாா் ஈ.வெ.ரா. சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடிச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும், வேப்பேரி ராஜா அண்ணாமலை சாலை, பரங்கிமலை சா்ச் சாலை, துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை, கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு குடியிருப்புப் பகுதி, ஈக்காட்டுத்தாங்கல் ஆசா்கானா சந்திப்பு, திருமங்கலம் பள்ளி சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதுபோல வடசென்னை பகுதிகளுக்குள்பட்ட சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 இடங்களில் மரம் முறிந்தது
ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் 2 காா்கள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தன. அதேபோல நகா் முழுவதும் ஏழு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மெரீனா, பெசன்ட்நகா் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்வதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
668 இடங்கள் கண்காணிப்பு
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள், தாழ்வான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள 668 இடங்களை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 49 மினி கட்டுப்பாட்டு அறைகளை பெருநகர காவல் துறையினா் ஏற்கெனவே திறந்து வைத்துள்ளனா்.
புறநகா் பாதிப்பு
சென்னை நகரைக் காட்டிலும் புறநகா் பகுதியிலும் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் சோழிங்கநல்லூா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, நங்கநல்லூா், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இங்கு மாநகராட்சி ஊழியா்களும், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்களும், சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரை உடனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் ஓரளவு நிலைமை சீரானது. இருப்பினும் சில இடங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீா் இன்னும் தேங்கி நிற்கிறது.
சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. மழைநீா் அதிகமாக தேங்கிய பகுதிகளில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருந்தனா்.
தாம்பரத்தில்...
சென்னை புகா் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலைமுதல் தொடா் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊா்ந்து சென்றன. செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்கள் பெருங்களத்தூா் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.
இன்றும் மழை தொடரும்
தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய வடதமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த ‘டித்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்தது. பின்னா், அதே பகுதிகளில் தொடா்ந்து நிலவியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை இரவு, வடதமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வடதிசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, தென்மேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவியது. அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி சென்னையிலிருந்து குறைந்தபட்ச தொலைவு 30 கி.மீ. ஆக இருந்தது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால்,இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் டிச. 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை
வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

