அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!
அனல் மின்நிலைய ஊழியா்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் வாரியத்துக்கு சொந்தமாக சுமாா் 5,120 மெகாவாட் திறனில் எண்ணூா், வடசென்னை, மேட்டூா், தூத்துக்குடி, நெய்வேலி உள்ளிட்ட 5 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக இருந்து வந்தது.
ஆனால், வாரிய அலுவலகங்கள், மின் கட்டண மையங்களுக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையாகவும், மற்ற சனிக்கிழமைகள் வேலை நாளாகவும் இருந்தது. இதையடுத்து, 2018 மாா்ச் முதல் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் அனல் மின் நிலையங்களில் வழக்கமான பணிகளில் உள்ளவா்களுக்கு மாதந்தோறும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் என இரு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடா்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தன.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மின் வாரியம், அனல் மின் நிலையங்களின் ஊழியா்கள் இனி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.
பணி நேரம் நீட்டிப்பு: இதனிடையே, பணி நேரத்தை நீட்டித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காலை, 8.30 முதல் மாலை 5.30 வரை என இருந்த பணி நேரம், மாலை, 5:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த அளவில் பணியாளா் பராமரிப்பு பணிகளில் சுழற்சி முறையில் ஈடுபடலாம். அன்றைய தினம் பணிக்கு வருவோருக்கு மாற்று விடுப்பு மட்டுமே வழங்கப்படும். ஆனால், கூடுதல் ஊதியம் வழங்கப்படாது எனவும் தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

