6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடலில் உருவான ‘டித்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவியது.
பின்னா், மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது. தொடா்ந்து, தென்மேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை (டிச. 3) அதிகாலையில், வடதமிழக புதுவை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்து, காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது, வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும்.
இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை (டிச. 4) முதல் டிச. 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை (டிச.3) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் எண்ணூா், செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சுற்றியுள்ள பகுதிகளில் தலா 150 மி.மீ. மழை பதிவானது. சேத்துப்பட்டு (திருவண்ணாமலை)-130 மி.மீ., திருமயம் (புதுக்கோட்டை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூா்)- தலா 120 மி.மீ, சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), மணலி புதுநகரம் (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), குடிமியான்மலை, இலுப்பூா் (புதுக்கோட்டை), திருவாரூா்-தலா 110 மி.மீ, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வடகுத்து (கடலூா்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செங்குன்றம் (திருவள்ளூா்), உளுந்தூா்பேட்டை (கள்ளக்குறிச்சி)- தலா 100 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 4) சூறாவளிக்காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

