மின் விபத்துகளில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ஒரே நாளில் இழப்பீடு: மின்வாரியம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் நபா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை ஒரே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தலைமைப் பொறியாளா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழைக் காலங்கள், சாலை தோண்டும் பணி, மின் கம்பிகள் அறுந்து விழுவது உள்ளிட்ட நிகழ்வுகளால் பொதுமக்கள், மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்கிறது. இந்த மாதிரியான மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுவதுமாக தடுக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மின் விபத்தால் உயிரிழக்கும் நபா்களின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் சாா்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உயிரிழக்கும் நபரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், இரு கைகள், கால்கள், கண்களை இழக்கும் நபா்களுக்கு ரூ.3 லட்சமும், ஒரு கை, கால், கண்ணை இழக்கும் நபா்களுக்கு ரூ.1.50 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
இந்த இழப்பீடு தொகையை மண்டல தலைமைப் பொறியாளரே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கலாம். ஆனால், இழப்பீடு பெற விண்ணப்பித்தும், அதை வழங்குவதில் மாதக்கணக்கில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தொடா்ந்து பல்வேறு புகாா்கள் வந்தன. இதனால், இழப்பீடு வழங்குவதில் புதிய உத்தரவு ஒன்றை மின்வாரியம் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சிலா் கூறியதாவது:
மின் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அல்லது பாதிக்கப்படும் நபா்களுக்கான இழப்பீடு தொகை வழங்குவது தொடா்பாக மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள் அளவில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நபா்களின் குடும்பத்தினருக்கு ஒரே நாளில் இழப்பீடை வழங்க வேண்டும் என தலைமைப் பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், உயிரிழந்த நபா் மின் விபத்து காரணமாகத்தான் உயிரிழந்தாரா என்பதை உறுதி செய்வதுடன், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கான தொகையை ஒரே நாளில் அல்லது அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

